சென்னை மற்றும் விழுப்புரத்தில் தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான ஒன்பது இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்றைய தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. கணினிகளிலிருந்து கோப்புகள் அழிக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடைபெற்றது.
இதற்கிடையே, விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீட்டில் இருக்கும் பீரோ மற்றும் லாக்கர்களுக்கு சாவி இல்லை என அமைச்சரின் உதவியாளர் கூறியதால் பூட்டு திறக்கும் நபரை அழைத்துச் சென்று அதனை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், மாற்று சாவி கொண்டு வீட்டில் உள்ள பீரோ லாக்கர்களை திறந்து சோதனையிட அமலாக்கத்துறை முயற்சி செய்தனர். ஆனால், முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இதனால், பீரோ மட்டும் லாக்கர்களை உடைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விழுப்புரம் - திருப்பான் ஆழ்வார் தெருவில் உள்ள வீடு, விக்கிரவாண்டியில் உள்ள பொறியியல் கல்லூரி உள்பட ஒன்பது இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையை நடத்தினர். விழுப்புரம் வீட்டில் சாவி இல்லாததினால், அங்கு சோதனையைத் தொடங்குவதில் சுமார் அரை மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. சோதனையின்போது சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் பொன்முடியும், அவர் மகன் பொன் கெளதம சிகாமணி எம்.பி.யும் இருப்பதாக கூறப்படுகிறது.
அவர்களிடம் அமலாக்கத்துறையினர் வழக்குத் தொடர்பாக விசாரணையும் நடத்தி வருவதாகத் தகவல் வெளியானது. இந்த சோதனை திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரிடம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சோதனைக்கான காரணம் என்ன என்பது இதுவரை அமலாக்கத்துறையின் சார்பாக தெரிவிக்கப்படவில்லை.
மேலும் விழுப்புரம் சண்முகபுரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டின் அருகில் ஒரு மருத்துவமனை உள்ளது. இதற்கிடையே அமைச்சர் பொன்முடி வீட்டில் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதால், அந்த மருத்துவமனைக்குச் சென்ற நோயாளிகள் காவல் துறையினரால் தடுக்கப்பட்டனர். இதனால் அவர்கள் அவதி அடைந்தனர். மேலும், மருத்துவமனைக்குச் சென்ற வாகனங்களையும் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், நோயாளிகளை உறவினர்கள் 200 மீட்டர் தூரம் கையிலே தூக்கிச் சென்ற அவல நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: Minister Ponmudi: அமைச்சர் பொன்முடி, எம்பி பொன் கௌதம சிகாமணி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!