உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு குழந்தையை பெற்று வளர்த்து ஆளாக்குவதில் தாயின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ அதைவிட ஒரு மடங்கு கூடுதலாகவே தந்தையின் பங்களிப்பு இருக்கும். ஏனென்றால் தன் குழந்தை மீது அளவு கடந்த பாசத்தை வைப்பதில் மட்டுமே ஒரு தாயின் கவனம் இருக்கும். ஆனால் பாசத்தையும் தாண்டி தனது குழந்தை வாழ்நாளில் சொந்தக்காலில் நிற்பதற்காக பொறுப்புகளையும் கடமைகளையும் கற்றுத்தருவதில் தந்தையின் பங்களிப்பு என்றுமே மிகச் சிறந்ததுதான்.
பொதுவாக தாயின் பாசம் வெளிப்படையாகவும், தந்தையின் பாசம் வெளிப்படைத்தன்மை அற்றதாகவும் இருக்கும். அதாவது தாய் தன் குழந்தை மீது நேரடியாகவே மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்று கொஞ்சி மகிழ்வாள். ஆனால், தந்தையோ குடும்பப் பொறுப்புகளை சுமந்து கொண்டிருப்பதால் தனக்குள் இருக்கும் பாசத்தை வெளிப்படுத்த முடியாமலும் வெளிப்படுத்த தெரியாமலும் மனதுக்குள்ளேயே தன் குழந்தை மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருப்பார்.
பகலில் வியர்வை சிந்தி வேலை செய்துவிட்டு இரவில் வீடு திரும்பும்போது தனக்காக காத்திருக்கும் தன் குழந்தைகளுக்காக தின்பண்டங்கள் வாங்குவதைத் தந்தை என்றுமே மறந்ததில்லை. அவ்வாறு பண்டங்கள் வாங்கும்போது தந்தையின் கவலையெல்லாம் தான் வீடு செல்வதற்குள் தன் குழந்தைகள் தூங்கிவிடுமோ என்று மனதை வாட்டும். ஒரு சிறந்த வழிகாட்டியாகவும், சிறந்த நண்பனாகவும், சிறந்த ஆசிரியராகவும் தந்தை விளங்குகிறார். இப்படி பெருமைக்குரிய தந்தையை பெரும்பாலானோர் அவர்கள் கடைசி நாளில் கவனிப்பதில்லை.
வேலூர் மாவட்டம் சலவன்பேட்டை செங்காநத்தம் ரோடு பாரதியார் நகரைச் சேர்ந்தவர் மறைந்த ராமச்சந்திரன். இவரது தந்தை வெள்ளை நாயக்கர் - தாய் ஜெகதாம்பாள். இவர்களுக்கு தனலட்சுமி என்ற மகளும் உள்ளார். ஜெகதாம்பாள் தனது குழந்தைகள் இரண்டு பேர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். மேலும், தனது இளமைப் பருவம் முதல் கடினமாக உழைத்து தனது குடும்பத்தை வழி நடத்திவந்துள்ளார். வெள்ளை நாயக்கர் சரிவர வேலை இல்லாமல் இருந்துள்ளார். இதனால் இவர்களது குடும்பம் கடும் வறுமையை சந்தித்துள்ளது. அந்தச் சூழலிலும் மனம் தளராமல் ஜெகதாம்பாள் உழைத்து தங்களது குழந்தைகளை பாசத்துடனும் வளர்த்துவந்துள்ளார்.
இதேபோல் வெள்ளை நாயக்கரும் தனது குழந்தைகள் மீது அளவில்லா பாசம் காட்டிவந்துள்ளார். தனது இளமைப் பருவத்தில் பெற்றோர்களின் பாசத்தையும் தியாகத்தையும் உணராத ராமச்சந்திரன், வயது ஆக ஆக தங்களுக்காகவும் தங்கள் தலைமுறைக்காகவும் தனது பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தார்கள் என்பதை உணர்ந்து தனது பெற்றோர்கள் மறைவுக்குப் பிறகு அவர்களுக்கு மிக உயரிய அளவில் மரியாதை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே எண்ணியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் வெள்ளை நாயக்கர் உயிரிழந்துள்ளார். கணவனை இழந்து வாடிய ஜெகதாம்மாளும் 2004ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இதையடுத்து பாரதியார் நகரில் தனது வீடு அருகில் தனக்கிருந்த சொந்த நிலத்தில் தனது தாய் ஜெகதாம்பாள்-தந்தை வெள்ளை நாயக்கர் ஆகிய இரண்டு பேருக்கும் ராமச்சந்திரன் கோயில் எழுப்பி உள்ளார். இரண்டு பேரின் உடலையும் அங்கேயே புதைத்து அதன்மேல் இரண்டு பேருக்கும் சுமார் 6 அடி உயரம் உள்ள வெண்கல சிலையை எழுப்பியுள்ளார்.
ஒவ்வொரு சிலையும் தலா ரூ.7 லட்சம் மதிப்புள்ளது. வெறும் சிலைகளை மட்டும் வைக்காமல் கோயிலைப் போன்று கருவறை அமைத்து தந்தை-தாய் சிலைகளுக்கு முன்பு சிவன் சிலையும் அமைத்துள்ளார். அதேபோல் கருவறைக்கு முன்பு வழிபடுவதற்கு ஏதுவாக கோயிலைப் போன்றே வடிவமைத்து கம்பிகளை நிறுவியுள்ளார். தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய ராமச்சந்திரன் தினமும் தனது தாய் தந்தைக்கு பூஜை செய்யத் தவறியதில்லை.
மேலும், தனது தந்தையின் நினைவு நாளில் கோயிலில் விழா எடுத்து அப்பகுதியில் உள்ள சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம், புடவைகள் வழங்கி சிறப்பித்துள்ளார். என்னதான் பெற்றோர்கள் பாசம் புனிதமானது என்றாலும் கூட அதை மனதளவில் மட்டும் வைத்து வணங்கும் மனிதர்களுக்கு மத்தியில் தனது பெற்றோர்களுக்கு கோயில் கட்டி சிலை வைத்து வழிபாடு நடத்திய ராமச்சந்திரனைக் கண்டு ஊர்மக்கள் மிகவும் ஆச்சரியப்படுகின்றனர்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராமச்சந்திரன் திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவரது இழப்பு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது ராமச்சந்திரன் மனைவி மண்ணம்மாள் (51), மகள்கள் முனியம்மாள், சுஜாதா மகன் தண்டபாணி ஆகியோர் ராமச்சந்திரன் கட்டி எழுப்பிய கோயிலை பொறுப்புடன் பராமரித்து வருகின்றனர்.
தனது கணவனுக்கு பதில் மண்ணம்மாள் தினமும் தனது மாமனார் மாமியாரான வெள்ளை நாயக்கர்-ஜெகதாம்மாள் ஆகியோருக்கு பூஜை நடத்திவருகிறார். தந்தையர் தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில் பெற்ற தாய் தந்தைக்கு கோயில் கட்டி வழிபடும் குடும்பத்தை இன்றும் வேலூர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துவருகின்றனர்.