திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கிளியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு கணித இடைநிலை ஆசிரியையாக சசிகலா என்பவர் இருந்துவந்தார். இவர் ஒரு மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் மூன்று மாதங்களுக்கு முன்பு வேறு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், வெங்கிளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சசிகலா நேற்று வந்துள்ளார். உயர் அலுவலர்களுக்கு கையூட்டு கொடுத்து, பழைய பள்ளிக்கு மீண்டும் மாற்றலாகி வந்துவிட்டார் என்று குற்றஞ்சாட்டி, மாணவர்களை வெளியேற்றி பள்ளிக்குப் பூட்டுப்போட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் வட்டாட்சியர், பெற்றோரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சம்பளம் பெறுவதற்காகப் பணி நாளேட்டில் கையெழுத்திட மட்டுமே வந்தார். சசிகலா மீண்டும் பள்ளியில் பணியிடமாற்றம் செய்யவில்லை என்று வட்டாட்சியர் கூறியதை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டு பெற்றோர்கள் கலைந்துசென்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கதிரவன் கூறுகையில், "பெற்றோர்களின் புகாரைத் தொடர்ந்து ஆசிரியை சசிகலா மூன்று மாதங்களுக்கு முன் திருமலைகுப்பம் ஊராட்சி நடுநிலைப்பள்ளிக்கு பணிமாற்றம்செய்யப்பட்டார். மாத ஊதியம் பெறுவதற்கு நாளேட்டில் கையெழுத்திடுவதற்காக ஆசிரியை பள்ளிக்கு வந்துள்ளார்.
அப்போது, தலைமை ஆசிரியர் இல்லாததால், நாளேட்டில் கையெழுத்திட்டு பள்ளி வளாகத்தில் இருந்துள்ளார். இதனைத் தவறாகப் புரிந்துகொண்ட பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிலைமையை விளக்கி கூறிய பிறகு பெற்றோர்கள் கலைந்துசென்றுவிட்டனர்" என்றார்.
இதையும் படிங்க: பாலாற்றுக்குள் பாய்ந்த கார்: நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பிய இளைஞர்!