நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் ஆங்காங்கே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக ரசாயனக் கலவையால் செய்யப்பட்டு வரும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், வேலூரில் சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் முழுக்க முழுக்க காகிதத்தினால் ஆன 12 அடி உயர விநாயகர் சிலை பூஜைக்கு வைக்கப்பட்டுள்ளது. வேலூர், சைதாப்பேட்டை காணார் தெருவைச் சேர்ந்தவர் கோபி, எலக்ட்ரிஷியன் வேலை செய்து வருகிறார். இவர் தனது பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பணம் திரட்டி வித்தியாசமான முறையில் விநாயகர் சிலை அமைப்பதற்கு முடிவு செய்து, அதன்படி, சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் 12 அடி உயரம், 120 கிலோ எடையில், ரூ.5,000 செலவில் இந்த விநாயகர் சிலை செய்யப்பட்டுள்ளது. நவீன காலங்களுக்கு ஏற்ப விநாயகரை பல்வேறு கோணங்களில் வடிவமைத்து வரும் இந்த சூழலில், முழுக்க முழுக்க காகிதத்தால் ஆன இந்த விநாயகர் சிலை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சுமார் 1,500 கிலோ எடை கொண்ட இந்த விநாயகர் சிலை இப்பகுதியிலையே மிகவும் பெரிய சிலையாக கருதப்படுகிறது. இந்த சிலை வரும் புதன்கிழமை, வேலூர் சதுப்பேரியில் கிரேன் மூலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சதுப்பேரியில் கரைக்கப்படுகிறது.