வேலூர்: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ஒருவார விடுமுறை முடிந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு படையெடுத்தனர். அந்த வகையில், நேற்று (ஜன.19) ஞாயிற்றுக்கிழமை இரவு காட்பாடடி ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து, கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அதாவது, காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து மாலை நேரத்தில் சென்னைக்கு 8க்கும் மேற்பட்ட ரயில்கள் தினசரி இயக்கப்படுகிறது. அதனால், சென்னைக்கு செல்லும் பயணிகள் ரயிலில் பயணிக்க அதிகளவில் வருகை புரிந்தனர்.
முன்னதாக பொங்கலை முன்னிட்டு, அனைத்து பேருந்து மற்றும் ரயில்களின் முன்பதிவு துவங்கியதும் நிறைவடைந்தது. ரயிலில் முன்பதிவுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்வதற்காக முந்தி அடித்துக்கொண்டு பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இதையும் படிங்க: பொங்கல் லீவ் ஓவர்.. சென்னைக்கு ரீஎன்ட்ரி கொடுத்த மக்களால் தாம்பரம் - வண்டலூரில் கடும் போக்குவரத்து நெரிசல்!
அப்போது, கூட்டம் அதிகமாக இருந்ததால் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் ரயில்வே போலீசார், ஒலிப்பெருக்கி மூலமாக பயணிகள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினர். மேலும், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் ரயில் மூலம் வெளியூருக்கு செல்ல காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.