வேலூர்: குடியாத்தம் ராஜகோபால் நகர் பகுதியில் முன்னாள் ஆசிரியர் சண்முகம், அவருடைய மனைவி ராஜேஸ்வரி (71) ஆகிய இருவரும் வசித்து வந்தனர். சண்முகம் நேற்றைய முன்தினம் சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், ராஜேஸ்வரி தனியாக வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று (அக்.7) ராஜேஸ்வரி வீட்டில் உள்ள பூஜை அறையில் பூஜை செய்து உள்ளார். அப்போது சாம்பிராணி போடுவதற்காக தீயிட்டுள்ளார். சாம்பிராணியில் ஏற்பட்ட தீயால் அருகே இருந்த பஞ்சு மெத்தையில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதில் அச்சமடைந்த ராஜேஸ்வரி, வீட்டில் உள்ள குளியலறைக்குச் சென்றுள்ளார்.
அப்போது வீடு முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டில் இருந்து பயங்கரமாக புகை வெளியே வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், ராஜேஸ்வரியின் வீட்டிற்குச் சென்று கதவைத் திறக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், கதவை உடைக்க முடியாததால், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் தப்பி ஓட்டம்!
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜேஸ்வரி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து, தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கே வந்த 108 ஊழியர்கள் அவரை பரிசோதனை செய்தபோது, ராஜேஸ்வரி மூச்சுத்திணறி இறந்து விட்டது தெரிய வந்துள்ளது.
பின்னர் காவல் துறையினர் ராஜேஸ்வரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்து குறித்து குடியாத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்தும், விபத்துக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கின்றதா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் காதல்; பள்ளி மாணவியிடம் 13 பவுன் நகைகளை அபேஸ் செய்த இளைஞர் கைது