வேலூர்: காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தமிழியக்கம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 132 ஆவது பிறந்த நாள் விழா நேற்று (ஏப்ரல்.29) வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கவிஞர் வைரமுத்து பங்கேற்றார்.
விழாவில் பேசிய அவர், "இந்தியை எதிர்க்கவும் தமிழைக் காக்கவும் பலர் உயிர் தியாகம் செய்தனர், அவர்களை வணங்குகிறோம். ஆனால் இவ்வளவு போராட்டம் செய்தும் நாம் மீண்டிருக்கிறோமா என்பது கேள்வி. வட நாட்டு கலைஞர்கள் சிலர் இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்புகிறேன்.
இந்தி பேசுகிறவர்கள் மட்டும் தான் இந்தியா என்றால் இந்தி தேசிய மொழியாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இது பன்முகத்தன்மை பல கலாச்சாரங்களைச் சேர்த்துத் தைக்கப்பட்ட தேசம், தமிழர்கள் தற்போது குழந்தைகளுக்கு பெயரை வட மொழியில் வைக்கின்றனர். பெயர் என்பது நமது அடையாளம், கலாச்சாரம் பெயர் என்பது வரலாற்றுத் தொடர்ச்சி தமிழில் குழந்தைகளுக்குப் பெயரைச் சூட்டுங்கள்.
அது தான் பாவேந்தருக்கு நாம் செய்யும் பெருமை என்று பேசினார். இதில் தமிழியக்க பொதுச்செயலாளர் அப்துல்காதர், பொருளாளர் பதுமனார், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.