முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரில் நளினி, அவரது கணவர் முருகன் இரண்டு பேரும் வேலூர் மத்திய பெண்கள் சிறையிலும் ஆண்கள் சிறையிலும் தனித்தனியே அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவருக்கு சிறைச் சலுகைகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த விவகாரத்தில் தன்னை தனிச்சிறையில் வைத்து சிறைக்காவலர்கள் கொடுமைப்படுத்துவதாக முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கிடையில் தங்களை விடுதலை செய்யக்கோரியும் தனது கணவரை கொடுமைப்படுத்தும் சிறைத் துறையைக் கண்டித்தும் நளினி கடந்த 26ஆம் தேதி முதல் சிறை வளாகத்திற்குள் பட்டினிப் போராட்டம் நடத்திவருகிறார். இதனால் மூன்று வேளையும் உணவு உண்ணாமல் தண்ணீர் மட்டுமே அருந்துகிறார்.
உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிறை அலுவலர்கள் பலமுறைக் கேட்டுக்கொண்டும் நளினி தனது கோரிக்கையில் உறுதியாக உள்ளார். இந்த பட்டினிப் போராட்டம் இன்று 10ஆவது நாளை எட்டியுள்ளது. இதன் காரணமாக நளினியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து சிறை மருத்துவர்கள் அவரைத்தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.
இதேபோல் நளினியின் கணவர் முருகனும் ஆண்கள் சிறையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி பட்டினிப் போராட்டம் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘தனி அறை... உணவு கொடுக்காமல் சித்ரவதை..!’ - முருகன் முன்வைக்கும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்