முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, அவரது கணவன் முருகன் உள்பட ஏழு பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவருகின்றனர்.
இதில், நளினி வேலூர் மத்திய பெண்கள் தனிச் சிறையிலும் அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் தனித்தனியே அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில், நளினியும் முருகனும் தங்களை விடுதலை செய்யக்கோரி அவ்வபோது தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்புவது, கோரிக்கையை வலியுறுத்தி பட்டினிப் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது மீண்டும் நளினி சிறையில் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நளினி தனது மகள் திருமணத்திற்காக சில மாதங்களுக்கு முன்புதான் பரோலில் வெளியே வந்தார். ஆனால் மகளுக்கு திருமணம் நிச்சயமாகாததால் ஏமாற்றத்துடன் மீண்டும் சிறைக்குத் திரும்பினார். இதையடுத்து இலங்கையில் உள்ள முருகனின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் மீண்டும் பரோல் வழங்க வேண்டுமென நளினி சில வாரங்களுக்கு முன்பு சிறைத்துறை டிஐஜியிடம் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பரோல் வழங்கக்கோரி முருகனும் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து வேலூர் சிறையில் உள்ள அலுவலர்களிடம் கேட்ட போது, "நளினி தன்னை பட்டினிப் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி முறையாக சிறை அலுவலரிடம் மனு அளித்தார். அதன் அடிப்படையில் தற்போது பட்டினிப் போராட்டம் நடத்தி வருகிறார். ஆனால் முருகன் எந்த அனுமதியும் பெறாமல் உண்ணாவிரதமிருந்து வருகிறார். முருகனைப் பொறுத்தவரை கடந்த இரண்டு வாரங்களாகவே அவர் சரிவர உணவு எடுத்துக்கொள்ளவில்லை. இந்தச் சம்பவத்தால் வேலூர் சிறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி இன்று வேலூர் சிறைக்கு வந்து நளினி மற்றும் முருகனை தனித்தனியாக சந்தித்து பேசினார்" என்றார்.
இதையும் படிங்க: "நான் 29 வருஷமா நிலாவையும் நட்சத்திரத்தையும் பார்க்கலை" - தாயிடம் கலங்கிய நளினி!