ஆசை காதலனை கரம் பிடித்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி தனது வாழ்நாளை கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறையில் கழித்துவருகிறார் நளினி. கர்ப்பிணியாக சிறையில் அடைக்கப்பட்ட நளினிக்கு சிறையிலேயே பெண் குழந்தை பிறந்தது. ஹரித்ரா என்று பெயர் சூட்டப்பட்ட அந்தக் குழந்தை தனது சிறுவயது முதலே நளினியின் உறவினர்கள் மூலம் வளர்க்கப்பட்டது.
பிற தாய்களைப் போல் நளினியும் தனது ஆசை மகளை கொஞ்சி பாராட்டி சீராட்டி வளர்க்க ஆசைப்பட்டார். ஆனால் அவரது எண்ணங்களுக்கும், ஆசைகளுக்கும் தடை போடும் வகையில் அவரது சிறை வாழ்க்கை அவரது கனவுகளை சுக்குநூறாக்கியது. ஆசையாக பெற்ற மகளை உறவுகளிடம் கொடுத்துவிட்டு நாலு சுவர்களுக்குள் அடைபட்டார் நளினி. அதேபோன்று நளினியின் கணவர் முருகனும் தனது ஆசை மகளை பார்க்க முடியாமல் சிறைக்குள்ளேயே முடங்கினார்.
இந்த வழக்கில் நளினி உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் முதலில் தூக்குத் தண்டனை விதித்தது. இதனால் நளினியும் முருகனும் தனது மகளின் கல்யாணத்தைப் பார்க்க முடியாமலேயே மரணித்துவிடுவோம் என்று அஞ்சினர். ஆனால் அவரது தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது அவர்களுக்கு சற்று நிம்மதியைக் கொடுத்தது. இருப்பினும் என்றாவது ஒரு நாள் விடுதலை ஆகி மீதமுள்ள காலங்களை மகளுடன் கழிக்கலாம் என்று இருவரும் எண்ணினர்.
கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு ஆளுநர் முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்தியது. எனவே நிச்சயம் நாம் விடுதலை ஆகிவிடலாம் என நளினி உள்ளிட்ட ஏழு பேரும் கனவுக் கோட்டையைக் கட்டினார்கள். ஆனால் இந்த நிமிடம்வரை இவ்விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த முடிவும் எடுக்காததால் இந்தக் கனவும் நிறைவேறாமல் உள்ளது. இந்த சூழ்நிலையில்தான் ஆசையாக பெற்ற மகளின் திருமணத்தை நேரில் நின்று நடத்தி முடிக்க நளினி ஆசைப்பட்டார். அதன்படி தனது உறவினர்கள் மூலம் மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்யும்படி கூறி இருந்தார்.
மேலும் திருமண ஏற்பாட்டை தான் முன்னின்று நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனக்கு ஆறு மாதம் பிணைக் கோரி விண்ணப்பித்தார். ஆனால் நீதிமன்றம் ஒரு மாதம் மட்டுமே பரோல் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி நேற்று நளினி வேலூர் பெண்கள் சிறையில் இருந்து ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார்.
கடைசியாக கடந்த 2016 ம் ஆண்டு தனது தந்தை மறைவிற்காக நளினி 12 மணி நேரம் இதேபோல் பரோலில் வெளியே வந்தார். எனவே சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரக் காற்றை சுவாசிப்பதால் சிறையிலிருந்து வரும்போது மிகுந்த உற்சாகத்துடன் பட்டு சேலை அணிந்து தலையில் மல்லிகைப்பூ வைத்து புன்னகைத்தபடியே நளினி வெளியே வந்தார். நளினி, பிணையில் வெளியே வரும்போது நான் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க மாட்டேன், அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க மாட்டேன், காவல்துறையின் அறிவுரைகளை ஏற்று நடந்து கொள்வேன் போன்ற உறுதிமொழிகளை கைப்பட எழுதிக் கொடுத்து வந்துள்ளார்.
சிறையிலிருந்து புன்னகையுடன் காவல் துறை வாகனத்தில் ஏறிச்சென்ற நளினி சிங்கராயர் வீட்டில் தனது தாயார் பத்மாவதி தன்னை வரவேற்க ஆரத்தியுடன் தயாராக நின்றதை கண்டு ஒரு நிமிடம் கண் கலங்கினார். என்னதான் நளினி குற்றம்சாட்டப்பட்டவராக இருந்தாலும், ஒரு தாய் மகள் பாசம் என்பது அளவில்லா உணர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த சந்திப்பு இருந்தது. தற்போது துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
லண்டனில் இருக்கும் நளினியின் மகள் ஹரித்ரா விரைவில் தமிழ்நாட்டிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹரித்ராவிற்கு திருமணம் நிச்சயமாகும் சூழலில் நளினி மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கூறப்படுகிறது.
விடுதலை கேட்ட நளினிக்கு தற்போது தற்காலிக சுதந்திர சுவாசம் கிடைத்துள்ளது. இது நிரந்தரமாக மாற ஆளுநர் மை சிந்துவாரா?