குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம், புவனேஸ்வரி பேட்டை, பாண்டியன் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (48). கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று மாலை மனோகரன் குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு கெங்கையம்மன் கோவில் உள்ளே சென்று கோவில் வளாகத்தில் கற்பூரத்தை ஏற்றி முட்டி போட்டுக்கொண்டு தூரத்திலிருந்து அம்மனை கும்பிட்டுள்ளார்.
சாமி கும்பிட்ட சிறிது நேரத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது கோயிலுக்கு வந்த பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த மனோகரனை பக்தர்களும், அக்கம் பக்கத்தினரும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மனோகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட போலீசார் கெங்கையம்மன் கோவிலுக்கு சென்று அங்கு உள்ளவர்களிடம் மனோகரன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: யார் அந்த சார்? தமிழகத்தில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.. சுற்றி வளைக்கும் போலீஸ்..!
தொடர்ந்து கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மனோகரன் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இது குறித்து விசாரிக்கையில் கடந்த சில தினங்களாக மனோகரன் வீட்டில் தனக்குத்தானே பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது தன்னை யாரோ அழைப்பதாகவும் கூறிக் கொண்டு வந்துள்ளார். மேலும் பதட்டமாகவே இருந்துள்ளார். அவர் எதற்காக கோயிலுக்கு சென்று தற்கொலைக்கு முயன்றார் என தெரியவில்லை.
இதனிடையே அதுகுறித்து வெளியான சிசிடிவி காட்சியில், மனோகரன் தற்கொலைக்கு முயல்வதும், அதை சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பதும் காண்போரை பதைபதைக்க வைக்கிறது. குடியாத்தம் கங்கை அம்மன் கோவில் வளாகத்தில் கட்டிட மேஸ்திரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை தடுப்பு உதவி எண்: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தினாலோ தற்கொலை எண்ணம் தோன்றினால் ஆலோசனை பெற மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 அல்லது சிநேகா தன்னார்வ மையத்தின் உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலை தடுப்பு உதவி எண்; 044 24640050, மின்னஞ்சல் வழி தொடர்புக்கு; help@snehaindia.org