வேலூர்: காட்பாடி அடுத்த செங்குட்டை பாரதியார் தெருவைச்சேர்ந்தவர், சீனிவாசன் - பாரதி தம்பதி. இவர்களது மகன் வெங்கடேசன் (22), பாலிடெக்னிக் படித்து வேலை தேடி வருகிறார். இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி மாலை வெங்கடேசன், வேலை தேடி செல்வதாக தாயிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வெங்கடேசனின் தம்பி மணிகண்டனின் வாட்ஸ்அப்-க்கு ஒரு புகைப்படம் வந்துள்ளது. அந்த புகைப்படத்தில், வேலை தேடிச் சென்ற வெங்கடேசன் வெட்டுப்பட்டு ரத்தக் காயத்துடன் இருப்பதுபோல் இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன், இதுகுறித்து வெங்கடேசனின் நண்பர் நிர்மலிடம் கேட்டுள்ளார். அதற்கு நிர்மல், வெங்கடேசனை யாரோ கூட்டிச் சென்று அடித்துப் போட்டுவிட்டதாகவும், அதனை தான் வெளியில் கூறினால் தன்னை குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து காட்பாடி காவல் நிலையத்தில் வெங்கடேசனின் தாயார் பாரதி நேற்று (டிச.13) புகார் அளித்துள்ளார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், காட்பாடி டிஎஸ்பி பழனி தலைமையிலான காவலர்களுடன் கசம் பகுதிக்குச் சென்று, வெங்கடேசன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர்.
பின்னர் இது குறித்து காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் முன்னிலையில வெங்கடேனிசன் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட வெங்கடேசனின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் சந்தேகத்தின் பேரில் பள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த திவாகர், சதீஷ் ஆகியோரை காட்பாடி காவல் துறையினர் பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் வெங்கடேசனை வெட்டிக்கொலை செய்து செங்குட்டை அருகேயுள்ள காலி இடத்தில் புதைத்து விட்டதாக கூறியுள்ளனர்.
அதேநேரம் கொலை செய்தவர்கள் குறித்த விசாரணையில் கரிகிரி சூர்யா, கரிகிரி மணி ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என தெரியவந்தது. இதில் கரிகிரி சூர்யா மீது திருவலம் காவல் நிலையத்தில் சரித்திரப்பதிவேடு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா விற்பனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள மற்றவர்களை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தாயை கோடாரியால் வெட்டிக் கொன்ற மகன்: தேனியில் நடந்தது என்ன?