வேலூர், கேவி குப்பம் அருகே அமைந்துள்ள கவசம்பட்டு பகுதியில் நேற்றிரவு வானத்திலிருந்து மர்ம பொருள் ஒன்று விழுந்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
பின் அங்கு சென்று பார்த்த பொதுமக்கள், அதில் இரண்டு எல்.இ.டி. விளக்குகள் எரிவதைக் கண்டு அதனை வெடிகுண்டு என எண்ணி அச்சமடைந்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்துவந்த கேவி குப்பம் காவல் துறையினர், தடய அறிவியல் துறை அலுவலர்களை வரவழைத்து அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து தடய அறிவியல் அலுவலர்கள் தெரிவிக்கையில், "ஆய்வில் அது வெடிகுண்டு அல்ல எனத் தெரியவந்துள்ளது. மேலும் அது வானிலை ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பொருளாகும். இப்பொருள் மழை, வெயில், மேகமூட்டம் உள்ளிட்ட பருவநிலையை அறிய பயன்படும் கருவியாகும்" என்றனர்.
இதையடுத்து, இத்தகவலை உறுதிசெய்த பின்னர் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.