முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி முருகனின் சிறை அறையிலிருந்து மூன்றாவது முறையாக ஆண்ட்ராய்டு செல்போன் மற்றும் ஹெட்செட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறினர். இதுதொடர்பாக சிறைத்துறையினர் அளித்த புகாரின் பெயரில் பாகாயம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முருகன் ஏற்கெனவே ஐந்து முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில் இன்று 6ஆவது முறையாக முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
காவல் துறையின் பலத்த பாதுகாப்புடன் முருகன் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார். பின்னர் ஒன்றாம் நடுவர் நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி ஜெகநாதன் முன் முருகன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம் முருகன் தன் தரப்பு விளக்கங்களை அளித்தார். பின்னர், இவ்வழக்கை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இதுபற்றி முருகனின் வழக்கறிஞர் பா. புகழேந்தியிடம் கேட்டதற்கு, 'சிறைக்குள் அதன் விதிமுறைகளை மீறியவர்கள், முன் விடுதலை செய்ய சட்டம் அனுமதிக்காது என்ற காரணத்தைக்காட்டி, முருகனின் முன் விடுதலையைத் தடுப்பதற்காக சிறைக்குள் அவருக்கு எதிராகச் சதி நடக்கிறது. அதனால் தான் செல்போன், சிம் கார்டு, சார்ஜர், கத்தி, பணம் போன்ற பொருள்களை அறைக்குள் அவர் வைத்திருந்ததாகக் கூறி, அவரை பிரச்னையில் சிக்கவைக்கப் பார்க்கிறது சிறைத்துறை. சிறைத்துறையின் பலத்த பாதுகாப்பை மீறி, செல்போனை யார் கொண்டுசென்று கொடுத்திருப்பார்கள். விடுதலை தொடர்பான பேச்சு தீவிரமாக இருக்கும் நிலையில், அதனைத் தடுப்பதற்காக தீவிரமாகச் சில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதற்கு இதுவே ஒரு சாட்சி' என அதிர்ச்சியான தகவலைக் கூறினார்.
இதையடுத்து, மீண்டும் வேலூர் சிறைக்கு முருகன் அழைத்துச்செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். இதனால், நீதிமன்ற வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டை கலவர பூமியாக்க முயற்சி - முதல்வரிடம் பாஜக மனு