வேலூர்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து முருகன் விடுதலையாகி இருந்த நிலையில், அவர் மீது நிலுவையில் இருந்த வேலூர் மத்திய சிறையில் பெண் காவலரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக 2020ஆம் ஆண்டு தொடரப்பட்டிருந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என வேலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (எண் 4) முருகன் உட்பட இரண்டு பேரை இன்று (மே 19) விடுலை செய்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வந்த முருகன், உச்சநீதிமன்ற உத்தரவுபடி கடந்த 2022 நவம்பர் 12ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். எனினும், முருகன் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதாலும், அவர்மீது மேலும் ஒரு வழக்கு நிலுவையில் இருந்ததாலும் விடுதலைக்குப் பிறகு திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
முருகன் வேலூர் மத்திய சிறையில் இருந்தபோது, கடந்த 2020ஆம் ஆண்டு சிறையில் ஆய்வுக்குச் சென்ற பெண் காவலரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், தகாத முறையில் செயல்பட்டதாகவும் மத்திய சிறைத்துறை அளித்த புகாரின் பேரில் முருகன், மற்றொரு கைதியும் பிரபல ரௌடியுமான கேப்ரியல் ஆகியோர் மீது பாகாயம் போலீசார் 5 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இதையும் படிங்க: எந்த பணிப்பொறுப்பிற்கு வந்தாலும் அதில் ஒரு கடமை உணர்வை ஏற்படுத்த வேண்டும் - கல்யாணசுந்தரம் எம்.பி. உரை!
இந்த வழக்குகளின் மீதான விசாரணை, வேலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 4-ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தொடக்கத்தில் முருகன், தனக்குத்தானே ஆஜராகி வாதாடி வந்தார். பின்னர், வழக்குரைஞர் மூலம் வாதாடினார். மேலும், இந்த வழக்கு விசாரணைக்காக அவர் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து பலத்த போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணைக்காக திருச்சி சிறப்பு முகாமில் இருந்து பலத்த பாதுகாப்புடன் முருகனும், வேலூர் மத்திய சிறையில் இருந்து கேப்ரியலும் அழைத்து வரப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ரோஷ்கலா, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முருகன், கேப்ரியல் ஆகிய இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, முருகன் மீண்டும் திருச்சி சிறப்பு முகாமுக்கும், கேப்ரியல் வேலூர் மத்திய சிறைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: டியூப்களில் பதுக்கி வைக்கப்பட்ட 500 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்.. தலைமறைவாக இருந்த வியாபாரி கைது!