வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையிலிருந்து விடுதலையான முருகன், வேறு ஒரு வழக்கு தொடர்பாக வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
வேலூர் மத்திய சிறையில் இருந்தபோது முருகனின் சிறை அறையில் கடந்த 2020-ம் ஆண்டு பெண் சிறை அதிகாரி சோதனை செய்த போது அவரை தகாத வார்த்தையில் பேசியதாகவும், உடையை கழற்றி நிர்வாணமாக நின்று பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் கூறப்பட்டது. அது தொடர்பாக அப்போது சிறைத்துறை அதிகாரி அளித்தப் புகாரின் பேரில் பாகாயம் காவல் நிலையத்தில் முருகன் மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்குத் தொடர்பாக முருகன் வேலூர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் மாஜிஸ்ட்ரேட் திருமால் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளதாலும், முருகன் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதாலும் அவர் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்குத் தொடர்பாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முருகன் வேலூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார். அரை மணி நேரம் நடந்த விசாரணையில், வழக்கு வருகின்ற ஜன.2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சபரிமலை கோயிலுக்கு 39 நாட்களில் சுமார் ரூ.223 கோடி வருவாய்; பின்னணி என்ன?