வேலூர் தோட்டப்பாளையம் எட்டை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நரேஷ். இவர் ஒரு மாதத்திற்கு முன்பு மாரடைப்பு காரணமாக இறந்துபோன நிலையில், கனவனை பிரிந்த மனைவி கோமதி குழந்தைகளுடன் வாழ்ந்துவந்தார்.
இந்நிலையில் கணவர் இறந்த சோகத்தில் மனமுடைந்த கோமதி கடந்த வியாழக்கிழமை (அக். 08) தனது இரண்டு குழந்தைகளுக்கும் ஆல் அவுட்(கொசு விரட்டி) கொடுத்து தானும் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதையடுத்து இன்று(அக். 10) காலை கோமதி வீட்டிற்கு சென்ற அவரது மாமனார், மாமியார் மயக்கமுற்று கிடந்த மூவரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவர்களை சோதித்த மருத்துவர்கள் மூன்று வயது குழந்தை ரியாஷினி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் மயக்க நிலையில் இருந்த கோமதி மற்றும் அவரது 5 வயது ஆண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் தற்கொலைக்கு முயற்சிக்கும் முன் கோமதி தனது குடும்பத்தாருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில், ”அப்பா அம்மா எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. என்னால் அவர் இல்லாமல் வாழ முடியாது. சின்ன சின்ன விஷயமும் அவரையே ஞாபகப்பட்டுதுகிறது. அவர் இல்லாத வாழ்க்கையை என்னால் சத்தியமாக வாழமுடியாது. அவர் சென்ற இடத்திற்கே நாங்களும் சென்று விடுகிறேம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பரமத்தி வேலூர் அருகே பட்டா மாறுதல் செய்ய லஞ்சம்: விஏஓ கைது