வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள துத்தி தாங்கல் கிராமத்தில் நள்ளிரவில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாகத் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வந்தது.
இதனையடுத்து பறக்கும் படை அலுவலர் லட்சுமிபதி தலைமையிலான அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது துத்திதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் தட்சிணாமூர்த்தி (51), வீரசெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (42) ஆகியோர் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்துகொண்டிருந்தது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 21 ஆயிரத்து 880 ரூபாய், திமுக தேர்தல் அறிக்கை சம்பந்தமான துண்டுப்பிரதிகள், வாக்காளர் பட்டியல் அடங்கிய நோட்டுப் புத்தகம் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன.
பிடிபட்ட இரண்டு பேரும் கே.வி. குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் திமுக சார்பில் அவர்கள் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இருவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: என்கிட்ட ஆதாரம் இருக்கு.. திமுக வேட்பாளர் மா. சுப்ரமணியனை லாக் செய்யும் சைதை துரைசாமி