வேலூரில் உள்ள கிருபானந்த வாரியர் மண்டபத்தில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பாக அச்சமுதாய மாணவர்களுக்கு காவல்துறை தேர்வுக்கான இலவச எழுத்து மற்றும் உடல் பயிற்சி அளிப்பதற்கான திட்டத்தை திருவாடனை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் இன்று (அக்டோபர் 17) தொடக்கி வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா எங்கள் கட்சிக்கு ஒரு சீட்டு கொடுத்தார். எங்கள் சமுதாயத்திற்கான அங்கீகாரத்தை, அச்சமுதாய இளைஞர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களது உரிமைகளையும் பாதுகாக்கும் விதமாக எந்த அரசு உத்தரவாதம் அளிக்கிறதோ அவர்களுக்கே எங்களது முழு ஒத்துழைப்பும் இருக்கும்
சுப்பிரமணிய சுவாமி கூறியது போல அதிமுக தொண்டர்களின் ரத்தத்தின் ஒவ்வொரு அணுக்களிலும் கலந்தவர் சசிகலா. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் 27 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலின் முக்கியமான நகர்வுகளில் கூடவே இருந்தவர். அதனை யாராலும் மறுக்க முடியாது. சசிகலா அதிமுகவில் முக்கியமானவர். எனவே வரக்கூடிய காலங்களில் எது சரி, எது தவறு என்று ஆராய்ந்து கட்சியை சார்ந்த உறுப்பினர்களும், நிர்வாகிகளும் முடிவு செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மக்கள் சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். எப்படி பத்திரிகைகளுக்கு சுதந்திரம் உள்ளதோ அதே போல சினிமாவிற்கும் சுதந்திரம் உள்ளது. மக்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் விதமாகவோ அல்லது பொது மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவோ நடக்கக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் அனுமதிக்கக்கூடாது. விஜய் சேதுபதி அடிமட்டத்தில் இருந்து முன்னேரி வந்த ஒரு நல்ல நடிகர்.
சினிமா கலைஞர் என்பவர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆகையால் வெகு மக்களின் கருத்தை பரிசீலனை செய்து அதில் நன்மை இருக்கும் பட்சத்தில் நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஏனெனில் அவர், இந்த மண் சார்ந்த மொழி சார்ந்த கலைஞனாகத் தான் உள்ளார். மக்கள் செல்வனாக தான் மக்கள் அவரை பார்க்கின்றனர். எனவே மக்களுடைய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய செல்வந்தராக இருக்கு வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த தம்பதி! சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் மிரட்டல்!