ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் முப்படைகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், காஞ்சிபுரத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதை பாமக கடுமையாக கண்டிக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களை விஷக்கிருமிகள் அமைதியை குலைக்கும் நோக்கில் செய்துவருகின்றனர். யார் இதை செய்தார்கள் என கண்டறிந்து அவர்களை கைது செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அந்த திட்டம் தமிழகத்திற்கு வரக்காரணமே திமுகவும் ஸ்டாலினும்தான். ஹைட்ரோகார்பன் திட்டம் என்றால் என்னவென்றே ஸ்டாலினுக்கு தெரியாது. நீட், கச்சத்தீவு உள்ளிட்ட பல விவகாரங்களில் திமுகவே அனுமதி கொடுத்துவிட்டு பின்னர் அதற்கு போராட்டம் நடத்துவதாக குற்றஞ்சாட்டினார்.
பெரியார் குறித்த கருத்து விவகாரத்தில், ரஜினி அதை பேசாமல் தவிர்த்திருக்கலாம், அதுபோன்று ஒருசம்பவமே இல்லை என ஸ்டாலின் கூறுவது வரலாறு தெரியாமல் பேசுவதைக்காட்டுவதாக கருத்து தெரிவித்தார்.