வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக சார்பாக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், அதிமுக சார்பாக புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக இரண்டு கட்சிகளின் தலைவர்களும் வேலூரில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கிடையே, பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி சுமார் 500 பேர் அதிமுகவில் இணையும் விழா முதலமைச்சர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதியால் செய்ய முடியாததையா ஸ்டாலின் செய்துவிடப் போகிறார் என்றும், மாறி மாறி பேசிவரும் ஸ்டாலின் குட்டிக்கரணம் அடித்தாலும் முதலமைச்சர் ஆக முடியாது எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் கருப்பணன், பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி மக்களை ஸ்டாலின் ஏமாற்றி வருவதாகவும், அவருக்குப் பாடம் புகட்டும் விதமாகவே இந்த இணைப்பு விழா நடந்திருப்பதாகவும் தெரிவித்தார்.