வேலூர் தோட்டப்பாளையம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (50) கம்பி கட்டும் தொழில் செய்துவந்தார். கடந்த 4ஆம் தேதி அரசு, நியாய விலைக் கடைகளில் வழங்கும் பொங்கல் பரிசினை வாங்கி வருவதாகக் கூறிவிட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்படி வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மாயமான வேலுவை தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று (ஜன. 10) மாலை வேலூர் பாலாற்றங்கரையில் உள்ள சுடுகாட்டில் எரியூட்டும் தகன மேடைக்கு அருகே பாதி உடல் மண்ணில் புதைந்த நிலையில் பிணம் ஒன்று கிடப்பதாக தகவலறிந்த வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இரவு நேரமாகிவிட்டதால் அப்படியே விட்டுவிட்டு இன்று (ஜன. 11) காலையில் சம்பவ இடத்திற்குச் சென்று வேலூர் வட்டாட்சியர் ரமேஷ் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்தனர்.
அப்போது பிணமாகக் கிடந்தவர் மாயமான வேலு என்பது தெரியவந்தது. மேலும் அவரது கை, உடல் ஆகிய இடங்களில் காயங்கள் இருந்தன. முகம் சிதைக்கப்பட்டு, உடல் அழுகிய நிலையில் இருந்தது. உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வேலுவுக்கு முன்விரோதம் ஏதேனும் உள்ளதா? கடைசியாக அவர் யாருடன் வெளியே சென்றார்? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்க்கொண்டுவருகின்றனர்.