வேலூர்: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நேற்று (நவ.7) நடைபெற்ற 'நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம்' தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெண்களும் அதிக அளவில் உயர் கல்வி பயின்று வருகின்றனர். தமிழ்நாடு அரசும் உயர்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தப்பட்டு வருவதால் உயர் கல்வியில் மாணவர்கள் அதிக அளவில் பயின்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உயர் கல்வியில் பொற்காலமாக திகழ வேண்டும். இதற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் உயர்கல்வியுடன் பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். படித்து முடித்த பின்பு, வேலை தேடுபவர்களாக இல்லாமல் தொழில் முனைவோர்களாக மாறவேண்டும். தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழி கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும். இதற்குதான், மாணவர்கள் அதிக அளவில் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்தி மொழியை வேண்டுமானால், ஆர்வம் உள்ளவர்கள் படிக்கலாம். ஆனால், இந்தியை திணிக்கக்கூடாது என்ற கொள்கையில் தமிழ்நாடு அரசு உள்ளது. தமிழ்நாட்டில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் தமிழ் மொழியில் மொழிபெயர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்கள் எந்த துறையில் முன்னேறவேண்டும் என்று நினைக்கிறார்களோ? அதனை அறிந்து, ஆசிரியர்கள் அவர்களை ஊக்குவிக்கவேண்டும்.
படிக்கும் பொழுதே, மாணவர்கள் தான் எந்த துறையில் சிறந்து விளங்கவேண்டும் என்பது அறிந்து தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று அமைச்சர் பொன்முடி பேசினார். இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆறுமுகம் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 % இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது குறித்து எழுப்பிய கேள்விக்கு, அரசியல் அமைப்பில் சமுதாய அடிப்படையில், அடித்தளத்தில் இருக்கும் மக்களுக்குதான் இந்த இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சமூகப் பொருளாதார அடிப்படையில் என்று நீதிமன்றம் சொல்லவில்லை. இந்த தீர்ப்பு அரசியல் அமைப்புக்கு எதிரான ஒன்று.
மத்திய அரசு 27 % இட ஒதுக்கீட்டை கூட இன்னும் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்ற சூழ்நிலை இருக்கும்பொழுது, இந்திய அளவில் சமூக நீதிக்கொள்கை பரப்ப வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் இது போன்று தீர்ப்பளித்திருப்பது வருந்தத்தக்க செயல். இது தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுகவுடனான கூட்டணி கட்சிகளும் இணைந்து அதற்கான முடிவு எடுப்பார்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க: EWS 10% இட ஒதுக்கீடு செல்லும்: முதலமைச்சரின் அடுத்த கட்ட மூவ் என்ன? - திமுக மூத்த வழக்கறிஞர்