வேலூர்: அணைக்கட்டு அருகேவுள்ள ஊனை கிராமத்தில், பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சொந்த வீட்டு மனை உள்ள பழங்குடியினருக்கு பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு
வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி இன்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, “நீண்ட காலமாக குடிசை வீடுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு அரசு வீட்டு மனை பட்டா, வீடு கட்டுதல் போன்ற அடிப்படை தேவைகளை பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தி வருகிறது.
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து கிராமங்களும் தன்னிறைவு அடையும் வகையில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் உள்ள 79 ஆயிரத்து 395 கிராமங்களை உள்ளடக்கிய 12 ஆயிரத்து 525 ஊராட்சி மன்றங்கள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 37 மாவட்ட ஊராட்சிகளில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று 100 நாள் வேலை உறுதி திட்டத்தை சரிசமமாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் வருகின்ற பருவமழை காலத்திற்கு முன்னதாக செப்டம்பர், அக்டோபர் மாதத்திற்குள் அனைத்து கிராம சாலைகளுக்கான பணிகள் முடிக்கப்படும்.
ஒரு கிராமத்தின் அடிப்படை வசதிகளான சாலைகள், குடிநீர், மின்விளக்கு ஆகிய அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி முழுவதும் தன்னிறைவு பெற்ற கிராமங்களை ஏற்படுத்துவது அரசின் முக்கிய நோக்கம். சுமார் 50 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாத மலைவாழ் மக்களுக்கு அவர்களின் கடைசி வீடு வரை சாலை வசதி ஏற்படுத்துவது அரசின் முக்கிய நோக்கமாகும்.
தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் மகளிருக்கான உரிமை தொகை மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும். கிராமப்புறங்களில் இருக்கும் மகளிர், நகரங்களுக்கு செல்லும் பொழுது உள்ளூர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணிக்க சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பல கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர்” என்றார்.
இதனைத் தொடர்ந்து வேலூர் மேல்மொணவூர் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமிற்கு சென்று அங்கு ரூபாய் 11 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் 55 தொகுப்புகளைக் கொண்ட 220 வீடுகளுக்கான கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இக்கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயனாளிகளுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் 76 இடங்களில் 15ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் - கே.எஸ். அழகிரி அறிவிப்பு!