வேலூர்: தமிழ்நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கிவைத்தார். வேலூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கான மையங்கள் திறப்பு விழா இன்று (ஜனவரி 3) காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் துரைமுருகன் கலந்துகொண்டு மையங்களைத் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "மக்களுக்கான திட்டங்களைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில்தான் வைக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகளை கிராமங்களுக்கு மத்தியில் வைத்தால் உடனடியாகச் செய்தி சென்று சேரும்.
காட்பாடி பகுதியில் அமைந்துள்ள சில தனியார் திருமண மண்டபங்களால் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் காட்பாடி பகுதியில் எனக்கே தெரியாமல் புதிதாக ஒரு திரையரங்கம் முளைத்திருக்கிறது.
ஏற்கனவே அப்பகுதியில் வாகன நெரிசல் இருக்கக் கூடிய நிலையில் திரையரங்கம் கட்டப்பட்டுள்ளது. மேலும் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாவட்ட ஆட்சியரான நீங்கள் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
ஆனால், இது குறித்து நிச்சயமாக நான் நடவடிக்கை எடுப்பேன். அந்தத் திரையரங்கத்திற்கு எதன் அடிப்படையில் அனுமதி அளித்தீர்கள் என்பது போன்ற முழு விவரங்களை எனக்கு அளிக்க வேண்டும்" என்றார். மாவட்ட ஆட்சியரை அமைச்சர் பொதுவெளியில் கடிந்துகொண்டது அங்கிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இதையும் படிங்க: 10,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்