வேலூர்: காட்பாடியில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று, மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 49 ஆயிரத்து 311 பேருக்குப் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ஆகியவற்றை வழங்கினார்.
அதேபோல், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம், 39 சுய உதவிக் குழுக்களில் உள்ள 514 பயனாளிகளுக்கு ரூ.3 கோடி 37 லட்சம் கடன் உதவித்தொகை, காட்பாடியில் மாணவிகளுக்கு மிதிவண்டிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, பிரம்மபுரத்தில், ஐந்து மாவட்ட விவசாயிகளின் ஏற்றுமதி குறித்து பயிற்சி, திருவலம் ஊராட்சி ஒன்றியத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடை மற்றும் பயணிகளின் நியர் கூட புதிய கட்டடத்தை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, “பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன குழுவில் ஆளுநர் திரும்பப் பெற்றது வரவேற்கத்தக்கது. அண்மையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெய்த மழை அந்த மாவட்டங்களில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனைச் சரி செய்யும் பணியில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மழையின் காரணமாக அந்த பகுதிகளில் 750 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியாளர்கள் ரூ.5 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டுச் சென்றார்கள். அதற்கு வட்டி கட்ட வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது. தமிழக அரசுக்கு நிதிச்சுமை இருந்த போதிலும், திட்டங்களை நிறைவேற்றியும், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளையும் அரசு சரி செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்த கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளித்த அவர், ஒரு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், பெரும்பாலானோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களின் போராட்டம் பிசுபிசுத்தது” என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: தொன்றுதொட்டு அகப்பையை இலவசமாக வழங்கும் வேங்கராயன் குடிக்காடு குடும்பம்!