வேலூர்: காட்பாடி அருகே உள்ள தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாணவி சௌந்தர்யா (17). நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாகப் பெற்று விடுவோமோ என்ற அச்சத்தில் நேற்று (செப் 15) காலை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.அந்த வகையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (செப்.16) நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
நீட்டுக்கு இந்த அரசு முற்றுப்புள்ளி வைக்கும்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”தமிழ்நாட்டில் நீட் தேர்வு பத்துக்கும் மேற்பட்டோரை காவு எடுத்திருக்கிறது. அதன் பசி என்று தீரும் என தெரியவில்லை. பெற்றோர்களின் கண்ணீர் வீண் போகாது. இன்று இல்லாவிட்டாலும் நாளை 'நீட்' என்ற அரக்கனை ஒழித்து இந்த அரசு முற்றுப்புள்ளி வைக்கும்.
மக்களுக்கு ஒரு வேண்டுகோள், பயத்தாலோ, முடிவு வந்த பிறகு ஏற்படும் தோல்வியாலோ மனம் உடைந்துவிடக்கூடாது. தேர்வில் தோல்வி அடைவதால் உலகம் மூழ்கி விடாது. தேர்வுக்கு பின்னும் வாழ்க்கை உள்ளது. வீரமாக இதை எதிர்த்து நிற்போம்.
ஆனால், இதற்கு பிறகும் ஒன்றிய அரசு இணங்குமா என தெரியவில்லை. ஓராண்டுகளுக்கும் மேலாக டெல்லியிலே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 100 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். அதற்கெல்லாம் இனங்காத மத்திய அரசு இந்த 10 மாணவர்களுக்காக இனங்குமா என்ற சந்தேகம் உள்ளது. எது எப்படி இருந்தாலும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்” என்றார்.