வேலூர்: காட்பாடியில் 68ஆவது கூட்டுறவு வார விழா இன்று (நவம்பர் 17) நடைபெற்றது. இந்த விழாவில் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
ஆயிரத்து 151 நபர்களுக்கு 10 கோடி ரூபாய் மதிப்பிலான சிறு வணிகக் கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன், வேளாண்மைக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன், கூட்டுறவுத் துறையில் பணிபுரிபவர்கள் நேர்மையாகப் பணிபுரிய வேண்டும் எனவும், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கைதுசெய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்தார். மேலும் அவர், "கூட்டுறவுத் துறையால் பல நாடுகள் முன்னேற்றம் அடைந்துள்ளன. கூட்டுறவுத் துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் நல்ல திட்டங்கள்தாம்.
நேர்மையாகப் பணியாற்ற வேண்டும்
ஆனால், அதனைச் செயல்படுத்துவதில்தான் பல குறைகள் உள்ளன, அந்தக் குறைகள் களையப்பட வேண்டும். அதற்குக் கூட்டுறவுத் துறையில் உள்ள அனைத்து அலுவலர்கள், பொறுப்பாளர்களும் நேர்மையாகப் பணியாற்ற வேண்டும்.
கடந்த ஆட்சியில் போலி நகைகள், போலி ஆவணங்கள் வைத்து கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். அவ்வாறு கடனுதவிகள் பெற்றவர்கள் கண்டிப்பாகக் கைதுசெய்யப்படுவார்கள். அந்த முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுவருகிறது.
நீர்நிலைகளில் எங்கு ஆக்கிரமிப்புச் செய்திருந்தாலும் அதனை உடனடியாகச் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அகற்ற வேண்டும். நீர்நிலைகள், ஏரிகள், ஆறுகள் ஆகியவற்றில் யார் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வேலூர் மாவட்டம் அகரம் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பை மாவட்ட ஆட்சியர் உடனடியாக அகற்ற வேண்டும்" என துரைமுருகன் தெரிவித்தார்.