வேலூர்: காட்பாடியில் தமிழ்நாடு அரசின் இரண்டு ஆண்டு சாதனை மலர் வெளியீடு, வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று (மே 17) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சாதனை மலரை வெளியிட்ட அமைச்சர் துரைமுருகன், 1400 பயனாளிகளுக்கு 3 கோடியே 61 லட்ச ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் மேடையில் பேசிய அவர், "அரசால் தரப்படுகின்ற திட்டங்களை அமல்படுத்த வேண்டியது மாவட்டத்தின் கடமை மட்டுமல்ல; குறிப்பாக, அவை ஆட்சியரின் கடமை ஆகும் என்றார். ஒரு ஆட்சி சமுதாயத்தின் பல்வேறு பிரிவினருக்கு உதவுவது கடமை என்றும் அவர் கூறினார்.
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரில், உதவி பெறும் நிலையில் இருப்பவர்களுக்கு, அரசே முன்நின்று விலையில்லா பொருட்களை தந்து அவர்களை வாழ வைப்பதாகவும், வாழ்வாதாரம் இருப்பவர்களுக்கு தொழில் முனைவோராக நிதியை அரசு கொடுப்பதாகவும் தெரிவித்தார். அவ்வாறு கொடுக்கும் நிதி மற்றும் திட்டங்களை பல்வேறு பிரிவு அதிகாரிகள் மக்களுக்கு போய் சேர வைத்து அந்தந்த துறையை செம்மைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, முதிர்க்கன்னி உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரணத்தால் ஏற்படும் உதவித்தொகை, விபத்தில் இறந்தவர்களுக்கான உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, தையல் எந்திரம், சலவைப் பெட்டி என பல்வேறு திட்டங்களுக்கு அரசு பணத்தை ஒதுக்கீடு செய்கிறது.
விவசாயிகளுக்கு கரையை பலப்படுத்துதல் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இங்கே இருக்கிற அதிகாரிகள் அப்படிப்பட்ட பயனாளிகளை தேடி கண்டுபிடித்து திட்டங்களை கொண்டு போய் சேர்க்க உதவி செய்ய வேண்டும். இப்போது ரூ.3 கோடியே 61 லட்சத்து 88 ஆயிரத்து 33 அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இருந்தாலும், இது ரூ.30 கோடியாக இருந்தால் அனைவரையும் பாராட்டி இருப்பேன் என்று தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்டோர் துறையில் தையல் எந்திரம் ஒருவருக்கு தான் கிடைக்கிறது. முதிர்கன்னி உதவித்தொகை 4 பேருக்கும், சலவை பெட்டி 5 பேருக்கும், புதிய தொழில் முனைவராக ஒருவருக்கும், வீல் சேர் 2 பேருக்கும் வழங்கப்படுகிறது. அதிகாரிகள் இறங்கி வேலை செய்ய வேண்டும். ஆட்சியர் சுறுசுறுப்பானவர் தான். ஆனால், அவர் இலாக்காவை முடுக்கிவிட வேண்டும். அடுத்தமுறை வரும்போது, ரூ.30 கோடி அளவில் நலத்திட்டம் இருந்தால் அனைவரையும் வாழ்த்துவேன் என்றார்.
மு.க.ஸ்டாலின் ஆட்சியில், அவர் 24 மணி நேரமும் மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில், சில நேரங்களில் சில தவறுகளை மக்கள் செய்து விடுகிறார்கள் என்றார். விஷச்சாராயம் குடித்து பல பேர் உயிரிழந்த செய்தியை கேட்டவுடன் முதலமைச்சர் சாப்பிடாமல் கூட விழுப்புரத்திற்கு சென்று விட்டதாக தெரிவித்தார்.
அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்து விட்டு பின்னர், வரும் வழியில் தான் சாப்பிட்டதாகவும் தெரிவித்தார். கரோனா காலத்தில் தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து, கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
அடிதட்டு மக்களுக்கு பணிபுரிய வேண்டும் என எங்கள் தலைவர் கருணாநிதி சொல்லியதை, தளபதி ஸ்டாலின் செயல்படுத்தி வருவதாக கூறினார். பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லம், தொழுநோயாளிகளுக்கு மறுவாழ்வு இல்லம் அமைத்து இப்போது கிராமப் பகுதிகளில் தொழு நோயாளிகளே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளதாக தெரிவித்தார். அத்துடன், வேலூர் - சேம்பாக்கம் இடையில் 5 அடி அளவில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் ஒரு தடுப்பணை கட்டப்படுகிறது என்றார்.
காவிரி மாயனூர் என்ற இடத்தில் தான் கட்டிய தடுப்பணையைச் சுற்றி முட்காடுகளாக இருந்த நிலையில், அவைகள் தற்போது வாழைத் தோட்டங்களாக மாறின என்றார். இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் இறையங்காடு, கவசம்பட்டு உள்பட 7 இடங்களில் தடுப்பணை கட்டப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு சிப்காட் தொழிற்சாலை காட்பாடியில் கொண்டுவரப்பட உள்ளதாக பேசிய அவர், அடுத்த மாதம் இறுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: மதுவிலக்கு அமைச்சரை மாற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்