வேலூர்: மேல்மொணவூர் ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (27). வேலூரில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து இவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 11 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த அவர், திருட்டை தவிர்த்து ஏமாற்று வழியில் பணம் சம்பாதிக்க முடிவெடுத்துள்ளார். இதனையடுத்து அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ஆசை காட்டி பட்டதாரி இளைஞர்களை ஏமாற்ற முடிவு செய்துள்ளார்.
போலி அடையாள அட்டை தயாரிப்பு
அதன்படி தான் வேலூர் மத்திய சிறையில் மனநல ஆலோசகராக பணியாற்றுவது போல போலியான காவலர் அடையாள அட்டையை தயார் செய்து காண்பித்து அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இவர் கூறியதை நம்பியவர்களிடம் ஒரு நபரிடம் தலா ரூ. 65 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வசூலித்துள்ளார்.
பணம் கொடுத்த பின்னரே உதயகுமார் குறித்து அறிந்த மூன்று இளைஞர்கள் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இதேபோல 20 பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி, அதில் தலா ரூ. 2,800 கொடுத்தால் 85 ஆயிரமும், ரூ. 5 ஆயிரம் கொடுத்தால் 1 லட்சம் வரையும் கடனுதவி பெற்றுத் தருவதாக மூன்று பெண்களிடமும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அப்பெண்கள் தொடர்ந்து தொந்தரவு செய்யவே, சார் ஆட்சியர் நம்பர் என ஒரு தொடர்பு எண்ணை கொடுத்துள்ளார்.
மிமிக்ரி செய்து மோசடி
அந்த எண்ணை தொடர்புகொண்டபோது, உதயகுமாரே சார் ஆட்சியர் போல மிமிக்கிரி செய்துள்ளார். இதனையறிந்த பெண்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகார்களின் பேரில் வழக்குப்பதிவு செய்த வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர், உதயகுமாரை கைது செய்து அவரிடமிருந்த ரூ. 21 ஆயிரம் ரொக்கப்பணம், போலி காவல்துறை அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரித்தனர்.
விசாரணையில் ஏமாற்றுவோரை நம்ப வைப்பதற்காக பத்திரங்களில் எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்ததும், மொத்தமாக 8 லட்சத்து 33 ஆயிரத்து 800 ரூபாய் வரை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. விசாரணைக்குப் பின் உதயகுமார் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: Ration Rice Smuggling: 2 டன் அரிசி பறிமுதல்