வேலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மார்ச் 21ஆம் தேதி இரவில் 2 பேர் போதையில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த சத்துவாச்சாரி காவல் துறையினர் 2 பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
திடுக்கிடும் தகவல்: அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தனியார் மருத்துவ மாணவியும் அவருடைய ஆண் நண்பரும் மார்ச் 16ஆம் தேதி இரவு வேலூர் காட்பாடியில் உள்ள ஒரு திரையரங்கில் இரவுக்காட்சி பார்த்துவிட்டு, மார்ச் 17ஆம் தேதி விடியற்காலை 1 மணியளவில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் செல்வதற்காக காத்துக்கொண்டிருந்தனர்.
அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் இருவரையும் ஏற்றிக்கொண்டுள்ளார். அந்த ஆட்டோ போகும் வழியில் மருத்துவமனை நோக்கி செல்லாமல் திசைமாறி சென்றுள்ளது. அப்பெண் அதைக்கேட்டபோது, அந்த ஆட்டோவில் இருந்த ஓட்டுநர் உள்பட 5 பேர் அப்பெண்ணையும் அவரது ஆண் நண்பரையும் மிரட்டி ஒரு மறைவான இடத்திற்கு கடத்திச் சென்றுள்ளனர்.
பாலியல் வன்புணர்வு: அங்கு வைத்து அவர்களிடமிருந்த செல்போன்கள், ரூ.40,000 பணம், 2 சவரன் தங்க நகை ஆகியவற்றை மிரட்டி அபகரித்துள்ளனர். மேலும் அப்பெண்ணை பாலியல் வன்புணர்வும் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து மார்ச் 18, 19, 20 ஆகிய நாள்களில் அமைதியாக 5 பேரும் இருந்துள்ளனர்.
பின்னர் மார்ச் 21ஆம் தேதி இரவில் அதில் 2 பேர் போதையில் பணத்தைப் பிரிக்க முயன்றபோது, ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். அப்போது தான் சத்துவாச்சாரி காவல் துறையினர் 2 பேரையும் பிடித்து விசாரித்ததில் இந்தச் சம்பவம் நடந்தது தெரியவந்தது.
காவல் துறையினர் உறுதி: முதலில் அப்பெண்ணிடம் காவல் துறையினர் புகார் அளிக்குமாறு கேட்டுள்ளனர். இந்தச் சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என நினைத்து அப்பெண் புகார் அளிக்காமல் இருந்துள்ளார். பின்பு காவல் துறையினர் தகவல்கள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.
அதன்பேரில் அப்பெண் மார்ச் 22ஆம் தேதி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக இ-மெயிலுக்கு புகார் அளித்துள்ளார். இப்புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன், வேலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் (பொறுப்பு) தலைமையில் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
2 இளஞ்சிறார்கள் உட்பட 5 பேர் கைது: இது தொடர்பாக வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் ஆள்கடத்தல், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் இளஞ்சிறார்கள்.
அவர்களிடமிருந்து தடயங்களும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன் என்பவரை இன்று மாலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: கபடி வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை..!