ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் பேக்கரியில் வேலை பார்க்கிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி (32). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளான நிலையில், குழந்தைகள் இல்லாததால், வேலூர் வள்ளலாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருத்தரிப்பிற்காக மகாலட்சுமிக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இதில் அவர் கருத்தரித்தார்.
இதனை தொடர்ந்து பிரசவத்திற்காக நேற்று (ஏப்ரல்.30) மகாலட்சுமியை, அந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இரவு 10.30 மணி அளவில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை இறந்துவிட்டதாக உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து 2 மணி நேரம் கழித்து மகாலட்சுமியும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. மேலும் இறந்த குழந்தையை எங்களிடம் காண்பிக்கவில்லை. எங்களிடம் எந்த விதமான கையெழுத்தும் வாங்கவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மருத்துவர்கள் கவனக்குறைவு காரணமாகவே மகாலட்சுமி மற்றும் அவருடைய குழந்தை இறந்ததாக சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
காவல் துறையினர் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மு.க. ஸ்டாலின் ‘மே தின’ வாழ்த்து!