வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அருகேள்ள மங்கானிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போனதாக அவருடைய மனைவி பரிமளா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்புகாரின் அடிப்படையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக காவல் துறையினர், காணாமல்போன சேகரை பல்வேறு கோணங்களில் தேடிவந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வேறொரு வழக்கில் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன சேகர் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
அதற்கு சேகர் கொலை வழக்கிற்கும் எனக்கும் தொடர்பில்லை என்றும் செல்வராஜ், சேட்டு ஆகியோர்தான் இணைந்து சேகரை கொலைசெய்தார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் கே.வி. குப்பம் காவல் துறையினர் அந்தப் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், சேட்டு ஆகியோரைக் கைதுசெய்து, விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், முன்விரோதம் காரணமாக சேகரை கொலைசெய்து, கே.வி. குப்பம் அருகே மலை அடிவாரத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசியதாகத் தெரிவித்துள்ளனர். உடனே காவல் துறையினர், கைரேகை வல்லுநர்கள், தடயவியல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சேகரின் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு சேகரின் உடல் எலும்புக்கூடாகக் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவற்றை மீட்ட காவல் துறையினர், இவ்விகாரம் தொடர்பாக செல்வராஜ், சேட்டு ஆகியோரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரிக்கை!