வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). கட்டட தலமைத் தொழிலாளியாகப் (மேஸ்திரி) பணியாற்றிவருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் ரமேஷின் மூத்த சகோதரன் வெங்கடேசனுக்கு ரகசிய தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதில், நான் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த சுகுமார் பேசுகிறேன். உன் தம்பியை கடத்திவைத்துள்ளோம். அவரை விடுவிக்க வேண்டுமென்றால் ஐந்து லட்சம் ரூபாய் வேண்டும் என மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து, உடனடியாக வெங்கடேசன் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின்பேரில், காவல் துறையினர் தனிப்படை அமைத்து கடத்தல் குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.
காவல் துறையினர் தேடுவதை அறிந்த கடத்தல்காரர்கள் அச்சத்தில் ரமேஷை ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில் விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ரமேஷை மீட்டு விசாரணை நடத்தினர். அவர் கூறியது, "நேற்று மதியம் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே அமர்ந்திருந்தேன். அப்போது, ஆட்டோவில் வந்த சிலர் திடீரென்று கடத்திச் சென்றுவிட்டு பணம் கேட்டு மிரட்டினர்" எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் கடத்தல்காரர்கள் குறித்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டது வேலூரைச் சேர்ந்த சின்ன அப்பு, பெரிய அப்பு எனக் கூறப்படும் ரஜேந்திரன்-சுகுமார் சகோதரர்கள் என்பது தெரியவந்தது.
இவர்கள் மீது ஏற்கனவே வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதில், பெரிய அப்பு என்ற ராஜேந்திரன் குற்றவழக்கு ஒன்றில் கைதாகி சென்னை புழல் சிறையில் உள்ளார்.
இவரை விடுவிக்க ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்பட்டதால் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவியை கர்ப்பமாகிய நபர் மீது புகார்