திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மானூர் சுற்று வட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி உள்ளதாக கூறி விவசாயிகள் பாதிக்கப்பட்ட மக்காச்சோளங்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்று வட்டார பகுதிகளில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. அந்தப் பகுதியை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் காட்டுப் பன்றிகள் அதிக அளவில் உள்ள நிலையில் அவைகளால் மக்காச்சோள பயிர்களும், இதர பயிர்களும் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், காட்டுப் பன்றிகள் மக்காச்சோள பயிர்களை அதிக அளவில் சேதப்படுத்தி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மிகப்பெரிய அளவில் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் விவசாயிகள் '' காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு அதிகாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் திடீரென மூடப்பட்ட ஐடி நிறுவனம்! ஊழியர்கள் போராட்டம்!
மேலும், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மக்காச்சோள பயிர்களை கணக்கீடு செய்து உரிய இழப்பீடு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (ஜன.27) நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அப்போது அவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்புள்ள பிரதான சாலையில் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விவசாயி ஆபிரகாம் கூறுகையில், ஏற்கனவே காட்டு பன்றியால் பல்வேறு துயரங்களை சந்தித்து வருகிறோம். இது குறித்து பலமுறை முறையிட்டும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்'' என்றார்.