இந்தியா முழுவதும் மீண்டும் வெங்காய விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. பல மாநிலங்கள் வெங்காய விலையை குறைப்பதற்கும், பதுக்கலை தடுப்பதற்கும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டிலுள்ள வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நிலவி வரும் வெங்காய தட்டுப்பாடு மற்றும் பதுக்கல்களை குறைக்க சென்னையில் இருந்து இன்று(அக். 28) சுமார் 15 ஆயிரத்து 700 கிலோ பல்லாரி வெங்காயம் லாரி மூலம் கொண்டு வரப்பட்டது.
இதில் 5 ஆயிரத்து 700 கிலோ அளவிலான வெங்காயம் வேலூர் காட்பாடியில் உள்ள நகரமைப்பு கூட்டுறவு பண்டக சாலைக்கு கொண்டு வரப்பட்டது. மீதம் உள்ள வெங்காயங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பண்டக சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.
இறக்கப்பட்ட வெங்காயம் காட்பாடி காந்திநகரில் உள்ள பண்ணை பசுமை காய்கறி அங்காடியில் இன்று முதல் விற்பனைக்கு வரும் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சந்தையில் வெங்காயம் கிலோ 90 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் அரசின் பண்ணை பசுமை காய்கறி அங்காடியில் ஒரு நபருக்கு 2 கிலோ வீதம் 1 கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அலுவலர்கள் கூறியுள்ளனர்.