வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் அசநெல்லிக்குப்பம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்து ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி சப் இன்ஸ்பெக்டர்கள் லோகேஷ், சிரஞ்சீவிலு உள்பட போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கிடைத்த ரகசிய தகவலின்படி, நெமிலி - சேந்தமங்கலம் சாலையில் உள்ள ஆட்டுப்பாக்கம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், பத்ரகாளியம்மன் கோயில் பின்புறம் உள்ள ஒரு வீட்டின் அருகே செல்லும்போது போலீசாரை கண்டதும் ஒருவர் ஓட முயன்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, போலீசார் அவரை துரத்திப் பிடித்து விசாரித்ததில், அவர் நெமிலி அடுத்த சயனபுரம் வண்ணாரப்பேட்டை தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (54) என்பதும், அவர் அந்த வீட்டின் பின்புறம் போதைப்பொருளை பதுக்கியிருந்ததும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வீட்டின் பின்புறம் உள்ள மறைவான பகுதியில் சாக்கு மூட்டையில் பிளாஸ்டிக் கவர்களில் மொத்தம் 10 லிட்டர் நாட்டு சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. பின்னர், பதுக்கி வைத்திருந்த போதைப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து சம்பாதித்து வந்துள்ளார்.
இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் ஊர் பெயர் தெரியாத நபரிடமிருந்து, விஷவாடையுடன் கண் எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய நாட்டு சாராயத்தை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து ஆறுமுகம் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார், அவர் யாரிடம் இருந்து சாராயத்தை வாங்கி வந்தார் என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஆறுமுகம் என்பவர், அப்பகுதியில் பத்ரகாளியம்மன் கோயிலைக் கட்டி பூஜை செய்து வந்துள்ளார். மேலும், அவரது மகன் கடந்த 2 வாரத்துக்கு முன் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தென்காசியில் யானை தந்தங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர் கைது!