வேலூர்: அணைக்கட்டு பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதி மக்கள் மலைப்பகுதிகளில் பல்வேறு தொழில்களில், குறிப்பாக விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான அடிப்படை பொருட்கள் ஓரளவு மட்டுமே மலைப் பகுதிகளில் பெற்றுக் கொள்ள முடிகிறது.
பெரும்பாலான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், சுகாதாரம் உள்ளிட்ட தேவைகளுக்காக மலையில் இருந்து இறங்கி வந்து அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் வாங்கிச் செல்கின்றனர். அதேநேரம், மலைவாழ் மக்கள் வாழும் பகுதிக்கு தார் சாலை அமைத்து தர வேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இக்கோரிக்கைகளை வைத்து எந்த விதமான தேர்தல்கள் வந்தாலும், அதில் தேர்தல் வாக்குறுதியாக சாலை அமைத்து தருவேன் என அரசியல் கட்சியினர் வாக்குறுதி அளித்து வருகின்றனர். அந்த தேர்தல் வாக்குறுதிகள் வெற்றி பெறும் வரை மட்டுமே இருக்கின்றது எனவும், அதன் பிறகு அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அவ்வளவாக முயற்சி எடுப்பதில்லை என்றும் அங்கு வாழும் மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, மலைவாழ் மக்களுக்கு சாலை வசதியும், மருத்துவ வசதியும்தான் பிரதான கோரிக்கையாக உள்ளது. இதற்கு காரணம் மலைவாழ் மக்களுக்கு பிரசவத்திற்காகவும், விஷக்கடிகளுக்காகவும் அதிக அளவில் மருத்துவ உதவி தேவைப்படுகிறது. மலைப் பகுதியில் பல்வேறு விதமான விஷப்பூச்சிகள் இருப்பதால், விஷக்கடிகளுக்கு ஆளாகும் நபர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள அங்கு போதிய வசதி இல்லை. எனவே, மருத்துவமனை அவசியம் கொண்டு வர வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
பாம்புக்கடி மற்றும் பிரசவ நேரத்தின்போது தாய்மார்களின் உயிர் இழப்பு அல்லது குழந்தைகளின் உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் மலைப்பகுதிகளில் அடிக்கடி நடைபெறுகின்றன என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், வேலூர் அடுத்த அணைக்கட்டு தாலுகா அல்லேரி மலை கிராமத்தின் அருகே உள்ள ஆட்டுக் கொந்தரை குக்கிராமத்தில் வசித்து வந்த கூலித் தொழிலாளி சங்கர் என்பவரை நள்ளிரவில் பாம்பு கடித்துள்ளது.
பாம்பு கடித்ததால் சங்கர் அலறியதை அடுத்து அருகில் இருந்த உறவினர்கள், அவரை மீட்டு அல்லேரி மலையில் உள்ள ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சங்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக அணைக்கட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே அணைக்கட்டு பகுதியில் பாம்பு கடித்த இரண்டரை வயது பெண் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் உயிரிழந்தது. இந்த சம்பவத்திற்கு அடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கு பிறகு அல்லேரி மலையில் தனியாக ஓர் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
ஆனாலும், அப்பகுதிக்கு அருகில் மருத்துவமனை இல்லாததால் மோசமான சாலை வழியாக ஆம்புலன்சில் கொண்டு செல்லும் முன் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அப்பகுதியில் விஷக்கடிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஒரு மருத்துவமனை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இரத்த தான விழிப்புணர்வு பேனரில் பெண்கள் குறித்து சர்ச்சை வாசகம்!