வேலூர் அலமேலுமங்காபுரத்திலுள்ள அழகிரி நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ், இவரது மனைவி கவிதா. ஜெயராஜ் சென்னையில் உள்ள தனியார் வேதிப்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றிவருகிறார். கவிதா எம்.எட்(M.Ed) பட்டப்படிப்பு சேருவதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது கணவனுடன் சென்னை சென்றிருந்தார்.
இந்நிலையில் இன்று (அக்டோபர். 19) வீடு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் சென்னையில் இருந்த ஜெயராஜிற்கு தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த இருவரும் பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 18.8 சவரன் தங்க நகை, 1,070 கிராம் வெள்ளி நகை, 15 ஆயிரம் ரொக்கம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டுப் புடவைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.
இதைப்பற்றி அக்கம்பக்கத்தினரிடம் கேட்டபோது, வீட்டின் கதவு இரண்டு நாள்களாகவே திறந்து கிடந்ததாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து, சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் ஜெயராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.