வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தீயணைப்பு நிலையம் அருகே இன்பெண்டரி சாலையில் உள்ள கோட்டை கிளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கிளையுடன் இணைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாடிக்கையாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் வங்கிக் கிளை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அது குறித்து அவர்கள் கூறுகையில், "தற்போதுள்ள வங்கிக் கிளையில் கஸ்பா, வசந்தபுரம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவினர் கணக்கு வைத்துள்ளனர். இது தவிர நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் முதியோர் உதவி தொகை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், இந்த வங்கிக் கிளையை வேறு இடத்துக்கு மாற்றுவதால் இவர்கள் அனைவருமே மிகுந்த சிரமத்துக்கு ஆளாக கூடும் என்பதால், அந்த முடிவை கைவிட வேண்டும்" என்று வலியுறுத்தினர்.
இது குறித்து வங்கி மேலாளரிடம் கேட்ட போது, மத்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவு படி மூன்று கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள வங்கிளை அருகில் உள்ள வங்கிக் கிளையுடன் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 27ஆம் தேதி முதல் கோட்டை கிளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வங்கியுடன் இணைக்க இருக்கிறோம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றார்.