வேலூர்: பேரணாம்பட்டு அடுத்த மலைக் கிராமமான பாஸ்மார்பெண்டா கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மலைப்பகுதியில் பாஸ்மார்பெண்டா கிராமத்தைச் சுற்றி அரவட்லா, கொத்தூர் உள்ளிட்ட 10 மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் அதிகளவில் யானைகள் மற்றும் சிறுத்தைகளின் நடமாட்டம் உள்ளதால், அவ்வப்போது விவசாய நிலங்கள் வனவிலங்குகளால் சேதமடைந்து வருவதாகவும், இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கான அச்சம் நிறைந்த சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் பலமுறை அப்பகுதி வனத்துறையிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று (நவ.12) இரவு ராஜேந்திரன், ஜனகராஜ், மகேந்திரன், சங்கரன் ஆகியோரின் விவசாய நிலங்களுக்குள் புகுந்த யானைக் கூட்டம், சுமார் 100 தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து வந்த பேரணாம்பட்டு வனத்துறையினர், மலைக்கிராமங்களில் யானைக் கூட்டத்தின் நடமாட்டம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தையைப் போல் வளர்த்து வந்த தென்னை மரங்களைச் சேதப்படுத்திய யானைகளால் தீபாவளியைக்கூட நிம்மதியாகக் கொண்டாட முடியவில்லை என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, யானைகள் சேதப்படுத்திய விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், யானைகள் மீண்டும் விவசாய பகுதிகளுக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஹைதராபாத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து - 7 பேர் உயிரிழப்பு!