வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம்(50). இவரின் மகள் ஜனனி(17) 12ஆம் வகுப்பு வரை படித்து முடித்துள்ளார். தனது தந்தையுடன் ஜனனி விவசாய நிலத்திற்கு சென்று, அங்கு பயிர்களுக்கு நேற்று நீர்பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது ஜனனி கால் தவறி அருகிலிருந்த கிணற்றில் விழுந்தார்.
இதைப் பார்த்து பதறிய சிதம்பரம், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 72 அடி ஆழ கிணற்றில் பெண்ணை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் வெறும் 4 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது. இந்நிலையில், கிணற்றில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், கால் உடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜனனியை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.