திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சில வாரங்களுக்கு முன்பு கோயம்புத்தூரைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் சென்னையில் இருந்து கோயம்புத்துார் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார்.
அப்போது ரயில் நள்ளிரவு ஜோலார்பேட்டை அருகே சிக்னலுக்காக நின்றப்போது அதே ரயிலில் பயணம் செய்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்கத் தாலி சரடை பறித்துக்கொண்டு ரயிலில் இருந்து குதித்து தப்பி சென்றார்.
இதேபோன்று மற்றொரு நபர் பெங்களூரைச் சேர்ந்த ரோகினிதப்புஷன் என்பவரின் மூன்று சவரன் தங்க சங்கிலியையும், பெங்களூருவைச் சேர்ந்த மணி என்பவரிடம் 2 ஆயிரத்து 500 ரூபாய் பணத்துடன் செல்போனையும் அபகரித்துச் சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ரயில் கொள்ளையர்களை மூன்று தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை மாலை ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் இரண்டாவது நடைமேடையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் அங்கு நின்றுகொண்டிருந்த நான்கு வடமாநில இளைஞர்களை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் தீப்ஜோதி(21), சஞ்சூவ் ராய்(26), கிரேசார் (23), அமர்ஜோதி(23), என்பதும் இவர்கள் அனைவரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கூட்டுக் கொள்ளையர்கள் என தெரியவந்தது.
மேலும் இவர்கள் ஓடும் ரயில்களில் பயணிகளோடு பயணிகளாக பயணம் செய்து இரவு நேரங்களில் பயணிகள் துாங்குபோது அவர்களிடமிருந்து தங்க நகைகள், பணம், செல்போன் உட்பட விலை உயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்து செல்வதும் அம்பலமானது. இதை தொடர்ந்து இவர்களிடமிருந்து பத்து சவரன் தங்க நகையுடம் ஆறு செல்போன்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படியுங்க: கேட் கீப்பரை தாக்கிய போதை இளைஞர்கள்