வேலூர்: வேலூரை தலைமையிடமாகக் கொண்டு ஐ.எப்.எஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 25 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி கவர்ச்சியாக விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர். மக்களின் பல கோடி ரூபாய் பணத்தை வசூலித்த இந்த நிறுவனம் கடந்த ஆண்டு மூடப்பட்டது. இந்நிறுவனம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக கூறப்பட்டது.
இதுதொடர்பான புகாரில் இந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளான லட்சுமிநாராயணன், ஜனார்த்தனன், ஜெகன்நாதன், குப்புராஜ், சரவணகுமார் உள்ளிட்டோர் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிறுவனத்தின் ஏஜென்ட்டுகள் பலர் கைதான நிலையில், முக்கிய நிர்வாகிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், வேலூர், நெமிலி உள்ளிட்ட 21 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பணம், ஆவணங்கள் உள்ளிட்டவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஐ.எப்.எஸ் நிர்வாகிகள் 13 பேர் மீது கடந்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஐ.எப்.எஸ் நிறுவனத்தில் 57 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளதாகவும், 12 கோடி ரூபாய் மதிப்பிலான நிர்வாகிகளின் சொத்துகள் அடையாளம் கண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் உள்ள லட்சுமி நாராயணன் வீட்டில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் கபிலன், அருள் மற்றும் வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கனகேசன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று(ஏப்.4) திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த வீடு ஏற்கெனவே வழக்கின் காரணமாக சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி சீல் அகற்றப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. அதேபோல், அந்த வீட்டில் இருந்த 2 இருசக்கர வாகனங்கள், 2 இன்னோவா கார்கள் உள்ளிட்டவற்றையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.