திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன கல்லு பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா, மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் தமிழ்நாடு அரசின் பாரதி விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருள்கள் மற்றும் திருக்குறள் புத்தகங்களை வழங்கினார்.
பின்னர் தமிழ்நாடு அரசின் பாரதி விருது பெற்ற வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் சிவராஜ் மற்றும் மரங்கள் வளர்ப்பதன் அவசியத்தை கவிதை மூலம் வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பள்ளி மாணவிக்கு சால்வை அணிவித்தும் ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் சிவனருள், 'மாவட்டத்தின் தலைநகர் திருப்பத்தூராக இருந்தாலும் தமிழ் வளர்க்கும் திருப்பத்தூர் மாவாட்டத்தின் தமிழ் நகர் வாணியம்பாடிதான். தமிழ் தொண்டாற்றும் அறிஞர்களுக்கு மாணவர்கள் மத்தியில் பாராட்டுவிழா நடத்துவது வருங்காலத்தில் அவர்களையும் சாதனையாளர்களாக உருவாக்க வழிவகுக்கும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களும் நாம் சென்று பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது. எனவே 208 குக்கிராமங்களுக்கும், அங்குள்ள குடியிருப்புகளுக்கு நேரில் செல்லவேண்டும். என்னுடைய கால் படாத ஒரு இடம் கூட இருக்கக்கூடாது என்ற ஆவல் உள்ளது. கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்த்துவைப்பேன்' என்று உறுதியளித்தார்.