வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த பாலமதி மலை அடிவாரம் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் கிடப்பதாக ஜனவரி 27ஆம் தேதி பாகாயம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து உடலை மீட்டு அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது கொலையா அல்லது தற்கொலை என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டது. அதன்பின் பாலமதி மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சம்பவ நாளன்று ஒரு பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் பாலமதி மலைக்கு அழைத்து செல்வதும், அதன்பின் அவர் மட்டும் மோட்டார் சைக்கிள் திரும்புவதும் தெரியவந்தது.
அதனடிப்படையில் அவர் வேலூர் தொரப்பாடியை சேர்ந்த துணை காவல் ஆய்வாளரின் மகன் கார்த்தி (22) என்பதையும், அவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குள்ளச்சாவடியை சேர்ந்த குணப்பிரியாவை (22) இன்ஸ்ட்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டதையும் போலீசார் உறுதி செய்தனர்.
அதன்பின் கார்த்தியை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், கார்த்தி தனது காதல் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, குணப்பிரியா சென்னையில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, அவருக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் கார்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஏ.சி. மெக்கானிக் வேலை செய்து வந்த கார்த்தி நாளடைவில் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊதாரிதனமாக ஊர் சுற்றி திரிந்தால் அவருடைய தந்தை அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே கார்த்தி தனது காதல் குறித்து வீட்டில் தெரிவித்துள்ள நிலையில், அதனை பெற்றோர் ஏற்க மறுத்துள்ளனர். இருப்பினும், கார்த்தி கடந்தாண்டு குணப்பிரியாவை வள்ளிமலை முருகன் கோயில் மலையடிவாரத்தில் வைத்து நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார். கார்த்தி வீட்டில் அவர்களை சேர்க்காததால் வேலூர் விருப்பாட்சிபுரத்தில் உள்ள நண்பர் வீட்டில் 2 மாதம் தங்கி உள்ளனர்.
அவ்வப்போது கார்த்தி மேளம் அடிக்கும் வேலைக்கு சென்றுள்ளார். இதற்கிடையே குணப்பிரியா 5 மாத கர்ப்பமாகியுள்ளார். அதைத்தொடர்ந்து குணப்பிரியா, வேறொருவரின் வீட்டில் தங்க விருப்பமில்லாமல் கார்த்தியின் வீட்டிற்கு செல்ல ஆசைப்பட்டுள்ளார். அதை கார்த்தியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், கார்த்தி காலம் தாழ்த்திவரவே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குணப்பிரியா சிதம்பரத்தில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சில நாட்கள் இருந்து விட்டு ஜனவரி 26ஆம் தேதி இரவு 10 மணியளவில் வேலூர் புதிய பஸ்நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது கார்த்தி மோட்டார் சைக்கிளில் ஏற்கனவே தங்கியிருக்கும் நண்பர் வீட்டிற்கு அழைத்து செல்ல முயன்றுள்ளார்.
அப்போது குணப்பிரியா அங்கு செல்ல விரும்பாததால், பாலமதி மலையில் உள்ள கோயிலில் ஒரு நாள் இரவு மட்டும் தங்கிவிட்டு காலையில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறலாம் என்று கூறி கார்த்தி அழைத்து சென்றுள்ளார். ஆனால், அங்கு சென்ற உடன் வாடகை வீட்டில் குடியேறுவது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரம் அடைந்த கார்த்தி அங்கு கிடந்த கட்டையால் குணப்பிரியா தலையில் அடித்துள்ளார். அதில், அவர் மயங்கி சரிந்து கீழே விழுந்துள்ளார். அதன்பின்னரும் ஆத்திரம் அடங்காத கார்த்தி உடைந்த மதுபாட்டிலை அவரின் கழுத்தில் குத்தி உள்ளார். அதன்பின் அவர் உயிர் பிரிந்துள்ளது. இதையடுத்து உடலை மலை உச்சியில் இருந்து கீழே வீசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: ஓசூர் அருகே இளம்பெண் சடலமாக மீட்பு - விசிகவினர் போராட்டம்