வேலூர்: ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரி மூலம் பெரிய அளவில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், மத்திய நுண்ணறிவு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கந்தசாமி, வேலூர் மாவட்ட போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் ஆகியோர் தலைமையிலான குழுவினர், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அதில், ஈரோடு மாவட்ட பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் பார்சல்களில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து லாரியில் இருந்த ஈரோடு அண்ணா நகரைச் சேர்ந்த சதாசிவம் (32), திருச்சி மலைக்கோட்டை ஆண்டாள் வீதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் (26) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் சதாசிவம் என்பவர் கடந்தாண்டு மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதானவர் என்று தெரியவந்தது. அவருக்குச் சொந்தமான லாரியில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா வாங்கிச் சென்று கரூர், ஈரோடு மாவட்டங்களில் சப்ளை செய்ய முயன்றதும் உறுதியானது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் அருகே பழிக்கு பழியாக நடந்த கொலை..! 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
மேலும், அந்த லாரியில் 100 கிலோ கஞ்சாவை இவர்கள் கடத்தி வந்துள்ளனர். இதையடுத்து இருவரிடமும் மேற்கொண்ட தீவிர விசாரணையில், விசாகப்பட்டினத்தில் இருந்து சில்வர் பாத்திரங்களுக்கு பாலிஷ் போடும் கற்களை ஏற்றிக் கொண்டு வரும் வழியில், ஆந்திர மாநிலம் அன்னவரம் எனும் பகுதியில் 10 லட்சம் மதிப்பு கொண்ட 100 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு தமிழகத்திற்கு எடுத்து வந்ததாகக் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர். மேலும், ஆந்திராவில் இருந்து லாரியில் கிலோ கணக்கில் தமிழகத்திற்கு கஞ்சா கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: திருப்பூர் பேருந்து நிலையத்தில் பெண் படுகொலை; பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!