வேலூர் மாவட்டத்தில் காலையில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தி வரும் நிலையில், கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்துவருகிறது.
அதன்படி, நேற்றும் (ஜூலை 26) காலை வெயில் கொளுத்திய நிலையில் திடீரென வேலூர், காட்பாடி, திருவலம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. காட்பாடியில் சுமார் ஒருமணி நேரம் பெய்த கனமழை காரணமாக காட்பாடி-சித்தூர் பேருந்து நிலையத்தில், மழை நீர் குளம்போல் தேங்கி காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.
இதுதவிர குடியாத்தம், அணைகட்டு, கே.வி.குப்பம், லத்தேரி போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், வேலூர் மாநகரப் பகுதிகளில் தற்போது பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதால், சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.