கடந்த 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்த பெண் காவலர் ஒருவர், தற்போது வேலூர் ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் நான்கு சக்கர வாகனம் ஓட்ட கற்றுக்கொள்வதற்காக மோட்டார் வாகன பிரிவுக்கு சென்றுள்ளார்.
அங்கு பெண் காவலருக்கு ஓட்டுநர் பயிற்சியளிக்க ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவை சேர்ந்த தலைமை காவலர் பால்ராஜ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சி முடிந்த நிலையில், பெண் காவலர் தற்போது ஆயுதப்படையில் ஓட்டுநராக உள்ளார்.
இந்நிலையில், வாகனம் ஓட்ட பயிற்சி அளித்தபோது பெண் காவலர் தன்னிடம் சகஜமாக பேசியதை தவறாக புரிந்துகொண்ட பால்ராஜ், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி பெண் காவலரை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக பால்ராஜ் கடந்த பிப்ரவரி மாதம் தற்காலிக பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து கடந்த 27ஆம் தேதி பால்ராஜ், காவலர் குடியிருப்பிலுள்ள பெண் காவலரின் வீட்டிற்கு சென்று, அவரை தகாத வார்தைகளால் திட்டியும், தன்னை திருமணம் செய்யவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது மற்றொரு காவலர் வருவதை அறிந்த பால்ராஜ் அங்கிருந்து சென்றுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவலர் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இப்புகாரை ஏற்ற காவல் துறையினர், பால்ராஜை கைது செய்து 15 நாள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:30 ரூபாய் திருடனை பிடிக்க மோப்ப நாயுடன் விரைந்த போலீசார்