திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், சோலூர் மற்றும் சான்றோர்குப்பம் கிராமங்களுக்கு இடையில் உள்ள நரிக்குறவர் காலனியருகே கல்குவாரி அமைய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இப்பகுதியில், அரசு வழங்கிய 35க்கும் மேற்பட்ட வீடுகளில் நரிக்குறவர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அந்தப்பகுதியைச் சுற்றியுள்ள விளைநிலங்களில் அதிகளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும், குவாரி அமையவுள்ள 500 மீட்டர் இடைவெளிக்குள் ஐந்து கோயில்கள், இரண்டு நீர்த்தேக்க குளங்கள் மற்றும் அரசுப் பள்ளி, பழத்தோட்டங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
கூடுதலாக சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர், கல்குவாரி அமையவுள்ள இடத்திற்கு 400 மீட்டர் தொலைவில் 3.5 கோடி ரூபாய் செலவில் நீர்த்தேக்க அணை கட்ட உத்தரவிட்டுள்ளார். இந்தச்சூழ்நிலையில், கல்குவாரி அமைந்தால் விவசாயிகளும் மாணவர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாவர்கள் என அப்பகுதி மக்கள் ஜனவரி 31ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து கல்குவாரி அமைய கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர் பிரகாஷிடம் அளித்தனர்.
மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் உறுதியளித்தப் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துச் சென்றனர்.
இதையும் படிங்க: தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த மானைப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த கிராம மக்கள்